இரண்டாம் உலக யுத்தத்தை கண்முன் நிறுத்தும் நுால். வரலாற்று பின்னணியுடன் நுணுக்கமாக எழுதப்பட்டுள்ளது. யுத்தம் துவங்குவதற்கு முன், ஐரோப்பிய நாடுகளில் நிலவிய நெருக்கடிச் சூழலுடன் துவங்குகிறது. எட்டு பெரிய அத்தியாயங்களில், துணைத் தலைப்புகளில் தகவல்கள் உள்ளன.
இரண்டாம் அத்தியாயம், போர் துவக்க நிகழ்வை தெரிவிக்கிறது. போரின் போக்கு, ஏற்ற இறக்கங்கள், நாடுகளின் போர் தந்திரம், ஆயுதப்பயன்பாடு, அவற்றால் ஏற்பட்ட விளைவு என, போரின் துயர வரலாற்றை மிக நுட்பமாக படம் பிடிக்கிறது.
போரின் முக்கிய திருப்பங்களை முன் வைத்து அத்தியாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புள்ளி விபரங்களுடன் போரின் துயரத்தை தருகிறது. போரை ஐந்து காலக்கட்டமாக பிரித்து, சம்பவங்களை மிக நேர்த்தியாக சொல்கிறது. அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகளின் நினைவுக் குறிப்புகளும் நுாலுக்கு வலு சேர்க்கின்றன. வலி நிறைந்த போர்க்குறிப்புகளை, வரலாற்று ரீதியாக தெரிவிக்கும் நுால்.
– அமுதன்