எளிய மருத்துவ முறையில் நிரந்தர தீர்வு தரும் சித்த மருத்துவக் குறிப்புகளை தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. இதில் 67 தலைப்புகளில் பலவித நோய்களுக்கு மருந்துகளைக் கூறியுள்ளார். நோய்களின் தன்மை, நீக்கும் வழிகளையும் காட்டியுள்ளார். சமைத்த உணவையும் இயற்கை உணவையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாமா என்பதை விளக்கியுள்ள விதம் சிறப்பானது. நுாறாண்டுகள் வாழ உணவை எப்படி உண்ண வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.
வெந்நீர் குடிக்கும் பழக்கம் மற்றும் அதில் குளிக்கும் பழக்கம், ஆடம்பரமான உடைகள்பற்றி ஆசிரியர் கூறியுள்ள செய்தி யோசிக்க வைத்துள்ளது. மூலிகை மருந்தை நோயாளிகள் உட்கொள்ளும் போது சாப்பிட வேண்டிய இயற்கை உணவுகள், உடற்பயிற்சிகளும் கூறப்பட்டுள்ளன.
கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கும் மருந்துகளைக் கூறியுள்ளார். அத்துடன் நலம் தரும் மூலிகை செடிகளின் தாவர இயல் பெயர்களையும் பட்டியலாக அளித்துள்ளார். அலோபதி மருத்துவத்தில் தீர்வு கிடைக்காமல் தவிக்கும் நோயாளிகள், சித்த மருத்துவத்தில் நிச்சயம் நோயை ஒழித்து மகிழ்வுடன் வாழலாம் என நம்பிக்கை அளித்துள்ளார். இயற்கை மருத்துவத்தை நாடுவோருக்கு பயனுள்ள மருத்துவ நுால்.
– முகில்குமரன்