சாதி, மத, இன அமைப்புகளை விடவும் தமிழ்ச் சங்கங்களும் வரலாற்றுப் பேரவைகளும் நல்ல செயல்பாடுகளுக்கு அடித்தளம் அமைக்கின்றன என்னும் உண்மையை உரத்துச் சொல்லும் வகையில் கட்டமைக்கப்பட்ட நாவல்.
வேலாயுதம், காராளன், அகல்யா, தினகரன் முதலான பாத்திரங்களை உயிருள்ள மனிதர்களாக உலவ விட்டிருக்கிறார். பணம் பாதாளம் வரை பாயும், மனம் போல் வாழ்வு, மனமிருந்தால் மார்க்கமுண்டு, ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை முதலான பழமொழிகள் பலவற்றையும் நாவலாசிரியர் இடம் அறிந்து பயன்படுத்தியுள்ளார்.
வலிமையான கருத்துகளை மேடையில் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்வதுபோல் பல இடங்களில் வாழ்வியல் சிந்தனைகள் சொல்லப்பட்டுள்ளன. குடும்ப உறவுகளுக்குள் ஊடாடும் அரசியல், கலை, இலக்கியம் முதலானவற்றை முன்னிலைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பழங்கால நாவல் எழுத்தாளர்களின் பெயர்களையும் வேறு சில படைப்பாளர்களின் பெயர்களையும் அரசியல் தலைவர்களின் பெயர்களையும் நினைவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றே கொண்டுவந்திருக்கிறார். தற்கால நாவல்களின் மொழிநடையிலிருந்து வேறுபட்ட தமிழ் நடையைக் கொண்டிருக்கும் இந்த நாவல் வெண்ணிலா வேளையின் குளிர்ச்சியை மனத்திற்குள் நிறைக்கிறது. இலக்கியம் கலைக்கா, வாழ்க்கைக்கா, இரண்டுக்குமா என்னும் வினாக்களுக்கு விடையளிக்கும் நாவலாகத் திகழ்கிறது இந்த நாவல். தமிழ் நாவல் உலகத்தில் புதிய தலைமுறையின் துவக்கப் புள்ளியாக விளங்குகிறது.
– முகிலை ராசபாண்டியன்