தமிழினத்தின் தொன்மைநிலை, குமரிநாட்டின் அன்றைய நில வடிவம், பரப்பளவு விவரங்கள், கடல்கோள் அழிவுகள் மற்றும் பண்டைய நாவலந்தீவு வரலாறு, தமிழ்மொழி மற்றும் தமிழர் தோற்றம், புலம்பெயர்வுகள், சிந்துவெளி வரலாறு, தமிழின் வழிமொழிகள், தென்மொழிகள், தென்னகத்துக் குறும்நாடுகளின் பரப்புகள், சிற்றரசர் நாடுகள் எனப் பலவற்றையும் தொகுத்துப் பதிவு செய்யப்பட்டுள்ள நுால்.
பாண்டிநாடு, சோழநாடு, சேரநாடு, தொண்டை நாடு, கொங்குநாட்டின் நிலவியல் விபரங்களும் சுருங்கத் தரப்பட்டுள்ளன. தமிழர் நாகரிக வளர்ச்சிகள், சமய வளர்ச்சிகள், வானவியல் அறிவு, பிற நாடுகளில் தமிழர் குடியேற்றம், சிந்து சமவெளி தமிழர் புழக்கம் எனப் பலவும் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
வரி வடிவ எழுத்துகளின் தோற்றம், காலப்போக்கில் மாற்றம், நெடுங்கணக்கு, வடமொழி எழுத்தொலிகளுடனான ஒப்பீடு, தமிழ் எழுத்துகளின் ஒளிச்சிறப்புகள் போன்றவற்றைத் தந்து யாழ்ப்பாணத்து வின்ஸ்லோ அகராதியைப் பற்றிய விபரமும் தரப்பட்டுள்ளது.
செய்யுள் விளக்கம், பா வகைகள், அகப்பொருள், புறப்பொருள் ஒழுக்கங்கள், கற்பொழுக்கம், களவொழுக்கம் விளக்கங்கள், வீரக்கல் நடுவதன் காரணம், இயற்றமிழ், இசைத்தமிழ் விளக்கங்கள், இசை வகைகள், இசைக்கருவி வகைகள், நாடகத்தமிழ், ஆடல் வகைகள் விளக்கப்பட்டு உள்ளன. தொல்தமிழர் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டும் தகவல் களஞ்சியமாகத் திகழும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு