சுற்றுச் சூழல் கற்பிக்கும் பேராசிரியரின் சுயசரிதை நுால். சுய சேவை விளக்கம் பச்சைப் பசேல் என மனதில் ஒட்டிக் கொள்கிறது. பசுமைப் பாடல்கள் எழுதி பாடியதை பதிய வைத்துள்ளார். சுற்றுச் சூழல் போராட்ட வாழ்வுத் திரைப்படத்தின் இடையே வரும் பாட்டாக கேட்டு மகிழலாம்.
பேரூரில் பிறந்து, பள்ளிகள் மாறிப் பயின்று, கல்லுாரிக்கு அலைந்து, வாகன விபத்தில் தப்பிப் பிழைத்தவர், வீட்டிலிருந்து விவசாயம் செய்து, முடிவில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு போராட்டத்தில் அடிபட்டு இறந்த மாணவன் என நினைத்து தாய் அழுத சம்பவங்களை புதினம் போல் சுவையாக சுய சரிதையாக வரைந்துள்ளார்.
கல்லுாரியில் தாவரவியல் பேராசிரியர் ஆனதும், வகுப்பறையில் முடங்கிவிடாமல், மாணவர்களுடன் திருவக்கரை சென்றார். அங்கு பூமிக்குள் மரங்கள் மண் அழுத்தத்தால் கல்மரம் ஆவதையும், பெட்ரோலியம் ஆவதையும் விளக்குகிறார்.
வள்ளலார் மேல் கொண்ட அன்பால் சைவ உணவுக்கு மாறினார். அதற்கு அவர் கூறியுள்ள விளக்கம் அருமையானது. சுற்றுச் சூழலைக் காப்பதில் விலங்குகளுக்கும் பங்கு உண்டு. ஆனால் உலகில் ஒவ்வொரு ஆண்டும், 25 பில்லியன் விலங்குகள் மாமிச உணவுக்காக கொல்லப்படுகின்றன என்று கூறி வருந்துகிறார். கொரோனா பற்றிய விழிப்புணர்வும், அதற்கான பாடல்களும், திருவருட்பாவும் சுற்றுச் சூழல் விழிப்புணர்வும் நிறைவாக மனம் கவர்கின்றன.
– முனைவர் மா.கி.ரமணன்