சங்க காலம் முதல் தற்காலம் வரை மகளிரைப் பற்றிய மதிப்பீடுகளை, 27 கட்டுரைகளின் வாயிலாக விளக்கும் நுால். அறியப் பெறாத பல பெண் கவிஞர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தருகிறது.
அட்டைப் படத்தில் ஜெர்மனி, இலங்கை, புதுவை, காரைக்கால், தமிழகம் எனப் பல கடல் கடந்த பெண் கவிஞர்களை பெருமைப்படுத்தியுள்ளது. அன்றைய மகளிரை இன்றைய மகளிரோடு ஒப்புமைப்படுத்திக் காட்டப் பட்டுள்ளது.
பெண் புலவர் படைப்பில் பாலைத் திணை என்ற கட்டுரையில் கூறப்பெறும் சோகச் செய்தி, நெஞ்சைத் துன்பத்தில் ஆழ்த்துகிறது. பொட்டு அணிதல் திருமண அடையாளமாகவோ, பொட்டு நீக்கம் கைம்பெண் அடையாளமாகவோ சங்க காலத்தில் கருதப் பெறவில்லை என்றும், திலகம் என்பது நெற்றி அணிகலன் என்றும் உள்ளது.
பல்லாங்குழி விளையாட்டைப் பற்றிய கட்டுரை மிகவும் சுவைபட அமைகிறது. திராவிட மக்கள் ஆடுவதைவிட, ஆப்ரிக்கரே மிகுதியும் ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தை கொங்குநாட்டு அரசன் சாம்பா என்பவன் அறிமுகப்படுத்தினான் என்று சுட்டுவது அரிய புதுச்செய்தி.
கும்மி நுால்களில் பெண் கவிஞர்கள் வரைந்தவற்றைத் தேடி எடுத்து விளக்குவது அரிய முயற்சி. பெண் கல்விக் கும்மி என்ற நுால், பெண்களுக்குக் கல்வி வேண்டும் என்ற கருத்தில், கடந்த 1899லே எழுதப் பட்டுள்ளது. ஈழத்தின் முதல் பெண் கவிஞர் பத்மாசனி என்பவரையும் அறிமுகம் செய்கிறது.
– ராமலிங்கம்