ஈழப் போராளியாகவும், கவிஞராகவும் இருந்த செல்வி, சிவரமணி எழுதிய கவிதைகள் இடம்பெற்றுள்ள நுால். கவிதைகளை எழுத்தாளர்கள் சித்ரலேகா மவுனகுரு, அசோக், ஜமாலன், குருபரன் ஆகியோர் திறனாய்வு செய்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
செல்வியின் கவிதைகள் அழகியலோடு நின்றுவிடாமல் உணர்ந்த வலிகளையும், வாழ்வின் கசப்பான உண்மைகளையும், போராட்ட உணர்வுகளையும் குறியீடாகவும், படிமமாகவும் உணர்த்துகிறது. போர் நெருக்கடி பற்றிய புரிதல் அதைப் பூடகமாக விளக்குதல், நொறுங்கிப் போன மன உணர்வுகள் இவரது தனித்தன்மை.
சிவரமணியின் தொடக்க காலக் கவிதைகள் தீவிரப் போராட்ட உணர்வை வெளிக்காட்டினாலும், பிற்பாடு தீவிரம் குறைந்துள்ளது. எனினும் உவமை, படிமம் புதிய தடத்தில் கூறப்பட்டுள்ளன. உணர்த்தும் முறை புதுமையாக உள்ளது. இலங்கை தமிழர் பகுதிகளில் நிலவிய நெருக்கடி காலச்சூழலை அறிவதற்கும், போராளிகளின் வலியை உணர்வதற்குமான நுால்.
– ராம.குருநாதன்