திருச்செந்துார் பாதயாத்திரை அமைப்பு, ராமேஸ்வரத்திலிருந்து 118 நாட்களில் காசிக்குச் சென்றதை குறிப்பிடும் புனிதப் பயணத் தொகுப்பு நுால். கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேச மாநிலங்களின் வழியாகவும், பெங்களூரு, செகந்திராபாத், ஹைதராபாத், ஆரஞ்சு சிட்டி என்றழைக்கப்படுகின்ற நாக்பூர், மார்வெல் சிட்டி என்று அழைக்கப்படுகின்ற ஜபல்பூர் போன்ற பெரிய தொழிற்சாலைகள் நிரம்பிய மக்கள் தொகை அதிகமாக உள்ள நகரங்கள் வழியாக பயணித்ததை சுவைபட குறிப்பிடுகிறது.
புண்ணிய நதிகளில் நீராடியும், 1,680 அடி உயரம் கொண்ட விந்திய சாத்பூரா மலை, அடர்ந்த காடு, அற்புதமான கோவில் வழிபட்டுக் கொண்டும் பாதயாத்திரை சென்றதை குறிப்பிடுகிறது. இனத்தால், மொழியால், பழக்க வழக்கத்தால், மதத்தால் வேறுபட்ட, பலதரப்பட்ட மக்களோடு பழகி, மொழியறிவைப் பெற்று பயணத்தைத் தொடர்ந்ததாகப் பதிவு செய்துள்ளது.
கலாசாரங்கள், மொழிகள், உடைகள், வழிபாட்டு முறைகள், உணவு முறைகள், பண்பாடுகள், இயற்கை எழில் எனப் பல தரவுகளைக் கொண்டுள்ள பயண வழிகாட்டி நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்