சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் இந்திரன், பதிப்புரிமையை துறந்து வெளியிட்டு உள்ள வித்தியாசமான கவிதைத் தொகுப்பு நுால். பதிப்புரிமையை துறந்துள்ளதை, முன்னுரைக்கு பதிலாக ஒரு முக்கிய அறிக்கை என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
ரத்தக்கோடு எனத் துவங்கி, 114 நவீன கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. யதார்த்த வாழ்க்கை சூழலை முகத்தில் அறைவது போல் சுட்டிக்காட்டி பேசுகிறது. பழமைக்கும் நவீனத்துக்கும் உள்ள முரண்பாடுகளை கருவாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. வாழ்க்கை, சமூகம் பற்றிய விமர்சனங்கள், வெளிப்படையாக பகிரப்பட்டுள்ளன.
‘நீளும் நிழல்களில் நீயும் ஒன்றாகிப் போனாய்...’ என்பது போன்ற துவக்கமும், ‘தீயில் சிக்கிய காடாய் மண்டிக் கிடக்கிறது புகழுரைகளின் சாம்பல்...’ என மனத்துணிவை வெளிப்படுத்துவதிலும், ‘நீரற்ற ஆற்று மணலில் தெரிகிறது தனிமையாக பயணம் செய்த உன் வண்டி தடம்...’ என்று முடிப்பதிலும், காட்சியுடன் கருத்தும் மனதை நிறைக்கின்றன.
அழகியலை மட்டும் அல்ல, வலி ஏற்படுத்தும் விமர்சனங்களையும் அதிக உள்ளீடாக கொண்டுள்ளது. சிந்தனை பரப்பை உயர்ந்த பண்பு சார்ந்து விவரிக்கும் கவிதை நுால்.
– மலர்