ஊதியத்திற்காக மட்டும் உழைக்காமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்களுக்குச் சீரிய தொண்டாற்றிய ஒரு துணை வட்டாட்சியரின் சுயசரிதை நுால். வறுமையிலும் செம்மையாக வாழ்ந்ததை விளக்கமுடன் தெரிவிக்கிறது.
விடாமுயற்சியால் படிப்படியாக உயர்ந்து, மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் தற்காலிக பணியேற்று, பின் தமிழ்நாடு தேர்வாணையம் வாயிலாக புள்ளிவிபரத் துறையில் பணியாற்றி, வருவாய்த் துறைக்கு மாறியவரின் வாழ்க்கை சுயசரிதம்.
மாணவர்கள் பயனுறும் வகையில், வருவாய்த் துறையில் தேர்வுகள் மற்றும் பெற வேண்டிய பயிற்சிகள் பற்றிய விபரங்களையும் பதிவு செய்துள்ளார். நில அளவை பயிற்சி, காவல் துறை பயிற்சி, சிறைச்சாலை நடைமுறைகள் பற்றிய பயிற்சி, நீதித்துறை நடுவர் பயிற்சி போன்றவற்றை திறம்பட பெற்றவர். கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த வரலாற்றின் ஒரு பகுதியையும் பதிவு செய்துள்ளார்.
நாணயம், நேர்மை, விடாமுயற்சி, கடின உழைப்பு, நல்லொழுக்கம், பிறருக்கு உதவும் தன்மை, நேரம் தவறாமை போன்ற பண்புகளை முன்னிறுத்தி உள்ளதால், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
– புலவர் சு.மதியழகன்