சங்க காலத்தமிழர்கள் பகுத்து வாழ்ந்த ஐவகைத் திணைகளை விளக்கி, ஒவ்வொரு திணையிலும் வணங்கப்பட்ட தெய்வங்கள், அக மற்றும் புற உணர்வுகள், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், தொழில்கள், வாழ்வியல் சிறப்புகள் போன்ற பல அரிய தகவல்களைத் திரட்டித் தொகுக்கப்பட்ட நுால்.
மலை மற்றும் மலை சார்ந்த இடங்களுக்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலையில் பூக்கும் குறிஞ்சி மலரின் பெயரால் விளங்கிய குறிஞ்சி நில மக்களின் தலையாய தொழில்கள், கருவிகள், பழக்கவழக்கங்கள், சிறுவர்களின் விளையாட்டுகள், உணவுப் பயிர்கள் தினைப்புனக்காவல், கிளிகள் ஓட்டுதல், ஓட்டும் கருவிகள் போன்ற தகவல்கள் சுவைபடத் தரப்பட்டுள்ளன.
குறுந்தொகைப் பாடலிலிருந்து காட்டப்பட்ட குறிஞ்சி நிலக் குரங்கின் பாச உணர்வும், பிரிவுத் துயரமும் மலை மக்களின் நெகிழ்ச்சியான வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக உள்ளது. குறிஞ்சிக் கடவுள் முருகனின் பிறப்பு பற்றி, சங்க கால ஐந்திணை வாழ்வியல் கடந்து, சமயத் தீவிரத்தன்மை மேலோங்கிய திணை மயக்கக் காலத்திற்குப் பிந்தைய புனைகதை தரப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. சங்க காலத் தகவல்கள் பலவற்றை அறிந்து கொள்ள உதவும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு