உலகம் முழுதும் பல பகுதிகளில் வாழும் தனித்தன்மை நிறைந்த பழங்குடி இன மக்களை பற்றி மானுடவியல் பார்வையுடன் தகவல்களை திரட்டித்தரும் நுால். பல சூழல்களில் வாழும், 34 இனக் குழுக்களின் முக்கிய பண்பாடுகளை உள்வாங்கி அறிமுகம் செய்துள்ளது.
பழங்குடியினர் வாழும் பகுதி, அதற்கு ஏற்ப வாழ்க்கையை தகவமைத்து கொண்ட விதம், குடியிருப்பு, புறத்தோற்றம், பழக்க வழக்கங்கள், உணவு தேடல் மற்றும் தயாரிப்பு, பாரம்பரிய செயல்பாடுகள், வழிபாட்டு முறைகள் பற்றி மதிப்புடன் குறிப்பிடுகிறது.
பல சமூகங்கள், சமூக, பொருளாதாரத்தில் பின் தங்கியமைக்கு உரிய காரணத்தையும் தேடி ஆராய முற்பட்டுள்ளார். குறிப்பிட்ட கலாசார பின்னணியுடன் வாழும் பழங்குடிகளின் இயல்பு, இடப்பெயர்வால் ஏற்படும் விளைவு பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.
பழங்குடி சமூகங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் அரிய முயற்சி இந்த நுால்.
– மலர்