வியாசர் எழுதிய ஸ்ரீமத் பாகவதத்தில், பதினோராம் ஸ்கந்தத்தில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தன் தீவிர பக்தரான உத்தவருக்கு உபதேசித்தது உத்தவ கீதை. இதை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் உரையுடனான நுால்.
தனிச்சிறப்புகள் கொண்ட ஒவ்வொரு கீதையும், பாவத்தை நீக்கி, வீடு பேறு அடையும் வழியைக் காட்டுவதாக அமைந்துள்ளன. இதில், 11ம் ஸ்கந்தம், ஏழாம் அத்தியாயத்தில், 19ம் ஸ்லோகம் முதல் உபதேசம் துவங்குகிறது.
ஐம்பூதங்கள், மனிதன், பறவைகள், விலங்குகள் மற்றும் உயிரினங்களிடம் கற்ற ஞானம் விளக்கப்படுகிறது. உட்தலைப்புகளில் பொருத்தமான கதைகளுடன் உபதேசங்கள் கூறப்பட்டுள்ளன.
உத்தவ கீதையின் கருத்துகளை ஒப்பீடு செய்யும் வகையிலான விளக்கங்கள் திருக்குறள், நீதிநெறி விளக்கம், கந்தர் அனுபூதி போன்ற நுால் பாடல் கருத்துகளோடு ஒப்பிட்டுக்கூறப்பட்டுள்ளன. உபநிடதங்கள், பஜகோவிந்தம் போன்ற வேதாந்த நுால்களின் சாரங்களும் இணைந்துள்ளன.
மலைப் பாம்பு, விட்டில் பூச்சி, தேனீ, யானை, தேன் சேகரிப்பவன், மான், மீன், விலைமகள், கடற்பறவை போன்றவற்றின் வாயிலாக, உத்தவருக்கு அறிவிப்பது போல, ஸ்ரீகிருஷ்ணர் உபதேசித்துள்ளார். சந்தேகங்களுக்கு கேள்வி – பதில் பாணியில் அளித்துள்ள விளக்கங்கள் எளிமையாக உள்ளன.
யோகத்தால் அடையும் பயன்கள், பக்தியை பின்பற்றும் வழிமுறைகள், கூடா நட்பு, ஆத்மானந்தத்தை அடையும் வழி போன்றவற்றையும், ஸ்ரீகிருஷ்ணன் உபதேசித்துள்ளார். யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ நினைப்போருக்கு வழிகாட்டும் நுால்.
– முகில் குமரன்