இமயமலை பயணம் குறித்த விறுவிறுப்பான நுால். சென்னை முதல் டில்லி வரை ரயில். அங்கிருந்து, காரில் இமயமலை என, பயணக் குறிப்புகள் நீண்டு செல்கின்றன. சண்டிகரின் அழகு, இமாச்சலத்தின் வசீகரம், சிகரத்தை தொட வைக்கும் சிம்லா, கொண்டாட வைக்கும் டேராடூன், ஊஞ்சலாட வைத்த உத்தராஞ்சல், ரிஷிகேஷம், ஹரித்துவார் என, முக்கிய இடங்களுக்கு நேரடியாக அழைத்து செல்லும் உணர்வை ஏற்படுத்துகிறது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட ராக் கார்டன் நீர்வீழ்ச்சி, இயற்கை அருவிகளின் வசீகரம் போன்றவை குறித்தும் உள்ளது. கர்ணால் என்ற ஊரில் கர்ணன் பிறந்ததாக நம்பப்படுகிறது. ‘ராப்டிங்’ படகு பயிற்சி, ரோப் கார் பயணம் திகில் அடைய வைக்கிறது. ரயில், கார் பயணத்தின் போது கிடைத்த அனுபவங்கள், பார்த்த, சந்தித்த மனிதர்கள், அவர்களின் குணங்கள், இடத்துக்கு ஏற்ற உணவு வகைகள், தங்கும் வசதிகள் குறித்து அறிய முடிகிறது.
புகைப்படத்துடன் எளிய நடையில் சொன்ன விதம், வாசிப்பை எளிதாக்கியது. பயணத்தை திட்டமிட்டு அமைப்பது பற்றி அறிந்து கொள்ள உதவும் நுால்.
– -டி.எஸ்.ராயன்