பண்டைய தமிழர் வரலாற்றை முழுதும் அறியும் முயற்சியாக, நடுநிலை, உண்மைத் தன்மையோடு, ஆழமான தரவுகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ள நுால். புதிய செய்திகளை துணிவோடு எடுத்துரைக்கிறது. வரலாற்று அடிப்படையில், தமிழரின் தொன்மம் பற்றி ஆராய்ந்து, அறிவியல், மானிடவியல், தொல்லியல் அடிப்படையில் கூறும் கருத்துகள் வியக்க வைக்கின்றன.
தமிழரின் வரலாற்று அடையாளங்கள் மற்ற நாடுகளுக்குப் பரவியிருந்த விதம், தமிழ் மொழி வளர்ச்சி வரலாறு, தமிழர் பண்பாட்டு வரலாற்றை, திட்டவட்டமான கருத்துகளோடு தந்துள்ளது. வணிகக் குழுக்கள் குறிப்பாக, சுமேரியர் தமிழ் மண்ணில் குடியேறி செயல்பட்டதை ஆதாரத்தோடு மெய்ப்பிக்கிறார். தொன்மத்தை ஆராயப் பயன்படும் பெருங்கற்காலச் சின்னங்களைக் கொண்டு, தமிழ் மண்ணுக்கும், உலகின் பிற பகுதிகளுக்கும் நிலவிய ஒப்புமையை எடுத்துக் காட்டியுள்ளார்.
மூலப்பண்பாடும் திரிந்த பண்பாடும், மூதாதையரின் இந்தியக் குடியேற்றங்கள் என்ற கட்டுரைகள் ஒப்பியல், மானிடவியல் நோக்கில் ஆழமான கருத்துகளை முன்வைக்கின்றன. பரந்த அறிவைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தமிழர் அவசியம் வாசிக்க வேண்டிய நுால்.
– ராம.குருநாதன்