எமிலி டிக்கென்ஸ், டி.எச்.லாரன்ஸ் ஆகியோரின் ஆங்கிலக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ள நுால். வாழ்க்கையின் பெரும் பகுதியைத் தனிமையில் கழித்தவர் எமிலி. அவரது கவிதைகளில் உள்ளுணர்வுகள் பெரும்பாலும் புறப்பொருள்களின் வாயிலாக உணர்த்தப்பெறும். நடைபாதையில் வந்த ஒரு பறவை என்னும் கவிதையில் உணர்த்தப்படுவதை மனித உணர்வுக்கும், பறவை செயலுக்கும் இடைப்பட்டதாய்க் காண முடியும்.
கொள்ளையனும், அந்தக் காலத்தில் வங்கிகள் நடத்துவோரும் ஒன்று என்பதை எமிலி, என் இழப்பு இரு முறை தான் என்னும் கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார். டி.எச்.லாரன்ஸ் மிகக் குறுகிய காலத்தில் நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள், கவிதைகள் என எழுதிக் குவித்தவர். எமிலியின் 41 கவிதைகளும், லாரன்சின் 13 கவிதைகளும் அடங்கிய மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு. தமிழ்ச் சன்னல் வழியாக ஆங்கிலக் கவிதையைக் காட்டுகிறது.
– முகிலை ராசபாண்டியன்