தமிழ் ஆய்வரங்கக் கட்டுரைகள், ஆய்வு செய்வோருக்கு பயன்படும் வகையில் நுாலாக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் முருகன், அகநானுாற்றில் விலங்கின உணவு, ஐங்குறுநுாற்றில் வாழ்த்துதல் மரபு, திருவள்ளுவரின் நுண் உத்திகள், பெருங்கதையில் வான்வெளிப் பயணம், கலம்பக அமைப்பு ஆய்வு, மு.வ., கு.அழகிரிசாமி, கம்பதாசன் படைப்புகள் ஆய்வு, கவி கா.மு.ஷெரீப் தலையங்கங்கள், கதைப் பாடல்களில் திருமணச் சடங்குகள், பன்னிரு திருமுறை வரலாறு என, 15 கட்டுரைகள் அலங்கரிக்கின்றன.
ஆற்றல் மிக்க ஆளி என்னும் வலிய விலங்கு, யானையோடு போரிட்டு வென்று, அதன் தந்தத்தைப் பிடுங்கி, குருத்தை உண்ணும் என அகநானுாறு கொண்டு விளக்குகிறார். கரடிக்கு கரையான், ஒட்டகத்திற்கு எலும்புகள், நீர் நாய்க்கு மீன், மானுக்கு பயிர்கள், பாலைவன யானைக்கு யா மரத்தின் நார் என்று, விலங்குகளின் உணவு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
– முனைவர் மா.கி.ரமணன்