நல்ல ஆசிரியரின் வழிகாட்டுதலைப் பின்பற்றும் மாணவர்கள், வாழ்க்கையில் வெற்றி பெறுவர். அந்த வகையில், ஆசிரியர்கள் எப்போதும் சிறந்தவர்கள். பள்ளி ஆசிரியராக, குழந்தைகளுடன் 30 ஆண்டுகளில் ஏற்பட்ட அனுபவ பகிர்வு நுால். மாணவர்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதையும், எப்படி வழிநடத்தினால் அது கேடாய் முடியும் என்ற அனுபவங்களையும் கூறியுள்ளார்.
குழந்தைகள் எப்போதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்; வீட்டுப் பாடம் எழுத வேண்டும் என்பது சரியல்ல என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறையில், மனப்பாடம் ஒப்பிக்கும் முறையை கற்பிக்கக் கூடாது என்கிறார்.
அப்துல் கலாமின் அறிவியல் ஆசிரியர், பறவையைப் பார்த்து விமானம் படைத்ததை, கடற்கரைக்கு அழைத்துச் சென்று பறவைகளைக் காட்டி விளக்கியது போன்று கற்பிக்க வேண்டும் என விளக்கப்பட்டுள்ளது. வகுப்பறையில் மாணவர்கள் பட்டாம்பூச்சிகளாக பறந்து திரிந்து கற்க வேண்டுமென விரும்புவதாக கூறியுள்ளது தனி சிந்தனை. ஆசிரியர், மாணவர் இடையே இருக்க வேண்டிய பிணைப்பு பற்றி விளக்கும் நுால்.
– முகில் குமரன்