கடும் உழைப்பால், திரைத்துறையில் நுழைந்து, உச்சம் தொட்டு, மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆரின் வாழ்வை விவரிக்கும் நுால். வாழ்ந்த காலத்தில், அவரோடு நெருக்கமாக பழகியவர்களை தேடி பிடித்து படையலாக கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆரை இயக்கிய இயக்குனர்,
சண்டை பயிற்சியாளர், பாடலாசிரியர், உடையலங்கார நிபுணர், சேர்ந்து நடித்த நடிகர், நடிகை, அரசியலில் உடன் பயணித்தவர்கள், தொழிலதிபர் என அடையாளம் கண்டு பேட்டி எடுத்துள்ளார். நடிப்பு, அரசியல் பிரவேசம், மக்கள் சந்திப்பு என, அரசியல்வாதியாக இருந்து கலைத்துறையில் எப்படி கோலோச்சினார் என்பதை விவரிக்கிறது.
தன்னம்பிக்கை, தளராத மனம், கடின உழைப்பு, தொலைநோக்கு பார்வை, எதிரிகளை அடிமையாக்கும் கவர்ச்சி, மக்கள் மீதுள்ள அளவு கடந்த பாசம் தான், அவரை உச்சம் அடைய செய்ததை சொல்கிறது. எம்.ஜி.ஆர்., அத்தியாயத்தை, அவரின் அரிய புகைப்படங்களுடன் விவரித்திருப்பது, வாசிப்பை சுவாரசியப்படுத்தி மெருகூட்டி உள்ளது.
எம்.ஜி.ஆர்., குறித்து அறிந்திராத தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. எம்.ஜி.ஆரின் வாழ்க்கை பயணத்தை தெரிந்து கொள்ள விரும்புவோர் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்