புதுச்சேரி இலக்கியவாதிகள் குறித்தும், அவர்களின் சில படைப்புகள் குறித்தும் அறிந்து கொள்ள உதவும் நுால். புதுச்சேரியில் படித்து, வாழ்க்கையை நகர்த்தி, தமிழகத்தில் வசிக்கும் பிரபஞ்சன்; தமிழகத்தில் பிறந்து, வாழ்வின் பின் பகுதியை புதுச்சேரியில் கழித்த கி.ராஜநாராயணன் என, பல படைப்பாளிகளின் புதுச்சேரி வாழ்க்கையை அலசுகிறது.
புதுச்சேரி தமிழ்க்காப்பிய தாத்தா துரை.மாலிறையனார், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆகிய இலக்கியவாதிகள் குறித்த ஆவணப்படங்கள் குறித்த தகவல், மனதில் ஆணி அடித்தது போல் பதிய வைக்கிறது. பாவண்ணன், பாரதி வசந்தன், சீனு தமிழ்மணி, பிரதிபா ஜெயச்சந்திரன் போன்ற 11 புதுச்சேரி இலக்கியவாதிகளின், தலா ஒரு படைப்பு உள்ளது. இது, அவர்களின் படைப்பாற்றலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
புதுச்சேரி நண்பர்கள் தோட்டம், வாசகர்கள், படைப்பாளிகளின் நட்புப் பாலமாக செயல்படுகிறது. இலக்கியவாதிகள் குறித்து பேசும்போது, புதுச்சேரியின் மண்ணின் தன்மையுடன் விவரிப்பது புதுமை. புதுச்சேரி படைப்பாளிகள் குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்