சக அதிகாரிகளால், ‘சிங்கம்’ என அழைக்கப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி எம்.சிங்காரவேலு, காவல் துறை பணியில் ஏற்பட்ட இடர், சவால் அனுபவங்களை சுவைபட விவரிக்கும் ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். அவரது காலத்திற்கு பின் அவரது மகன்கள் பதிப்பித்துள்ளனர்.
இந்திய கவர்னர் ஜெனரலாக ராஜாஜி பதவி வகித்தபோது, அவரது பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்தார் சிங்காரவேலு. அந்த பதவியை ஏற்றபோது ராஜாஜி விருப்பப்படி, ஜனாதிபதி மாளிகையில், ‘சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி’ என்று கம்பீரமாக அறிவிக்கும் வாய்ப்பை பெற்றவர்.
மவுண்ட் பேட்டன், நேரு, ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை போன்ற ஜாம்பவான்களோடு பணியாற்றி உள்ளார். மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை இவரது முயற்சியாலேயே துவக்கப்பட்டு, அதன் முதல் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் சிங்காரவேலு. இப்படி சுவாரசியங்கள் அடங்கிய புத்தகம்.
– கல்பலதா