இந்திய மண்ணில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த சூழலிலும், அவர்களின் கொடூரமான தாக்குதல்களுக்கு அஞ்சாமல் போராடி இன்னுயிர் நீத்த விடுதலைப் போராட்ட வீரர் மருதநாயகம் என்ற கான்சாகிப் மீது பாடப்பட்ட எளிய காப்பிய நுால்.
கான் சாகிப்பின் வீர, தீரப் பெருமைகளை வெளிப்படுத்துகிறது. அவரது அறம், மறம் ஆகிய திறங்கள் கொண்ட வாழ்க்கை நிகழ்வுகளோடு, மதுரைக் காண்டம், அயல்நாட்டார் காண்டம், படைக்களக் காண்டம், ஆளுனர் காண்டம், நல்லாட்சிக் காண்டம், போர்க் காண்டம் என ஐம்பத்தியொரு படலங்களில் பாடப்பட்டுள்ளது.
தெளிவான கதைச் சுருக்கங்கள் தரப்பட்டுள்ளன. கதைமாந்தர் அறிமுகம் காப்பியத்திற்கு முன்னோட்டமாக அமைந்திருக்கிறது. புதுச்சேரியில் வளர்ந்த கான்சாகிப், ஆர்க்காட்டு நவாபின் படையில் சேர்ந்து, கமாண்டர் என்ற நிலைக்கு உயர்ந்து, கிறிஸ்துவ பெண்ணை மணந்து, மதுரை ஆளுனராவதன் தொடர்ச்சியாக நல்லாட்சி செய்த நிலையில் கதையின் தடம் மாறுவது காட்சிகளாக கண்முன் செல்கின்றன.
இறுதியில் பாட்டுடைத்தலைவன் கான்சாகிப்பின் பெருமையை நிலைநாட்டும் வகையில் செய்யப்பட வேண்டிய பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சிறந்த சொல்லாட்சியால், எதுகை, மோனை இனிமைகளால் தற்கால நடையில் இலக்கியச் செழுமை மிக்கதாக உருவெடுத்திருக்கும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு