பண்டைக் காலச் சுவடிகள் மற்றும் கைப்பிரதிகளைக் காப்பதில் உள்ள செயல்முறைகளை எடுத்துரைக்கும் நுால். முடியாட்சிக் காலத்தில், அரசு குறிப்பு, இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, ஓலைச் சுவடி போன்றவை கோவில், அரண்மனை, மடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி சிதைந்து அழிந்தன. அரும்பாடுபட்டு பதிவு செய்த மருத்துவம், அறிவியல், இலக்கியம், கட்டடக்கலை, சமயம் சார்ந்த சுவடிகளின் சிதைவு, தொன்மை பண்பாட்டு அடையாளத்தில் பேரிழப்பு.
அகர வரிசை எழுத்து துவக்கம், கைப்பிரதிகள் மற்றும் அவற்றின் வகைப்பாடுகளை விளக்குவதோடு, பனையோலைச் சுவடிகள், அவற்றை தயாரிக்கும் முறை, ஓலைகளின் வகைகள், எழுது முறை, எழுது பொருட்கள், எழுத்து வடிவங்கள், எழுத்தின் தன்மை, கட்டமைப்பு, பராமரிப்பு போன்றவை பற்றி விரிவாகத் தரப்பட்டுள்ளது.
சுவடிகளை மீட்டெடுத்தல், கறை நீக்குதல், பழுது பார்த்தல், எழுத்துக்களைச் சரி செய்தல் போன்றவை பற்றி கூறுவதோடு, பிரதி பாதுகாப்பு நடைமுறைகளும் கூறப்பட்டுள்ளன. அருங்காட்சியகங்கள், ஆவணக் காப்பகங்கள், கைப்பிரதிக் காப்பகங்கள், கருவூலங்கள் மற்றும் சமய பீடங்களில், சுவடிகளை கையாளும் நடைமுறைகள் சிறப்பாக கூறப்பட்டுள்ளன. தொல்லியல் ஆர்வலர்கள் படித்துப் பயன்பெற வேண்டிய அரிய கருவூலம்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு