புலவர் அரிமதி தென்னகனாரின் படைப்புகளில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கள் இத்தொகுப்பில் இடம்பெற்று உள்ளன.
அமைதி, வளர்ச்சி, குழந்தைகளின் எதிர்காலம் என அனைத்தும், பெண்களை மையப்படுத்தியே கட்டமைக்கப்படுகின்றன. பொருள் ஈட்டுவது ஆணின் கடமை என்றால், குடும்பத்தை நடத்துவது பெண்ணின் கடமை. இதுதான் சங்க காலத் தமிழ் மரபு என்கிறது இந்நுால்.
படிப்போரும் கேட்போரும் மகிழும் வண்ணம், சிறந்த நடையுடையுடன் விளங்க வேண்டியது கவிதைக்கு இலக்கணம். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகியவற்றால், பிற எல்லாவற்றினும் சிறந்திருக்க வேண்டியது தேவையான பண்பாகும் என்கிறார் நுாலாசிரியர்.
சிறுவர் பாக்கள், மரபுப் பாக்கள், இசைப் பாக்கள், உரைப் பாக்கள், ஹைக்கூ எனத் தனித்தனிப் பகுதிகளாகக் கொண்டமைவதுடன், ‘மறத்தி’ மற்றும் ‘தாமரை’ ஆகிய குறுங்காப்பியங்களும், இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
‘இச்சொல்லை நீக்கி வேறொரு சொல்லை இங்கு அமைத்தால், இக்கருத்தும் அமைப்பும் சிறக்காது’ என்று கருதுமளவு, சொற்சேர்க்கை கொண்டு திகழ்வது கவிதை. அந்த வகையில், சிறந்த சொற்களைக் கொண்டமைந்துள்ளது இந்நுால்.
புதுக்கவிதைக்கு இலக்கணமாகத் திகழ்கிறது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்