மனித குலம் நம்பிக்கையுடன் பயணிக்கிறதா, அவநம்பிக்கையுடன் நகர்கிறதா என்ற மதிப்பீட்டை முன்வைத்து எழுதப்பட்டுள்ள முக்கிய நுால்.
தொல்லியல், மரபியல், மானுடவியல் மற்றும் வரலாற்றுச் சான்றுகளை மையப்படுத்தி உள்ளது. உலகில் நெருக்கடியான காலங்களில் நடந்த முக்கிய சம்பவங்களை மறு விசாரணை செய்கிறது. சுயநலத்துக்கு மனிதன் முன்னுரிமை கொடுக்கிறான் என, காலங்காலமாக நிலவும் கருத்து மீது கேள்வி எழுப்புகிறது.
நெருக்கடிகளின் போது மிக இயல்பாக செயல்பட்டுள்ளது மனித இனம் என்பதை பல்வேறு ஆய்வுகளை முன்வைத்து நிரூபிக்கிறது. அது தொடர்பான விவாதங்கள் நெகிழ்வை தருகின்றன.
நெருக்கடியின் போது போட்டி போடாமல் ஒத்துழைப்புடன் செயல்படுகிறான் மனிதன். சந்தேகப்பட வைக்கும் தருணங்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறான் என, ஆய்வு கருத்துக்களை சுட்டிக்காட்டி விளக்குகிறது. இவை பரிணாம வளர்ச்சியில் பெற்ற நம்பிக்கை என குறிப்பிடுகிறது.
மனித இனம் பற்றி உலகில் நிகழ்த்தப்பட்ட மிக முக்கிய ஆய்வு தகவல் அடிப்படையில் இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. மனித குல வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் எடுத்துச் சொல்கிறது. சிந்தனையில் மாற்றம் ஏற்படுத்தும் தகவல்களை கொண்டுள்ளது.
உலக புகழ் பெற்ற ஆங்கில நுாலை, தமிழில் சலிப்பு தட்டாத நடையில் மொழியாக்கம் செய்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.
இரக்கம், பொதுநலம், விட்டுக் கொடுத்தல், நெருக்கடியிலும் ஒழுங்கு போன்ற பண்புகள் மனிதர்களிடம் வளர்ந்து செழித்துள்ளதை ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறது. சமூகமாக வாழ்வதற்கு மேலும் நம்பிக்கை தரும் அற்புத நுால்.
– அமுதன்