செப்புத் திருமேனிகளின் வரலாறு, கலைப்பாணி, சிலை வார்க்கும் முறைகள், வடிவமைப்பு முறை, ஆடை அணிகலன்கள், ஆயுதங்கள் போன்றவற்றை, கள ஆய்வின் வழியே பண்டைய வரலாற்று பின்னணியில் வழங்கும் நுால்.
செப்புச் சிலைகள் செய்யும் கலை கி.பி., 10ம் நுாற்றாண்டில் பெருகியது. இந்த கலை வளர்ந்த வரலாறு, கலைநயம், வடிவ மாற்றங்கள் பற்றிய தகவல்கள், ஐந்து இயல்களில் நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
செப்புத் திருமேனிகளின் தோற்றம், வரலாறு, ஆடல்வல்லானின் திருக்கோலங்கள், பண்டைய மன்னர் பரம்பரைகளிடம் இருந்த தனித்த கலைப்பாணி, திருமேனிகளின் சிற்ப அமைதி மற்றும் உலோகச்சிலை செய்யும் தொழில் மரபுகளை சான்றுகளுடன் எடுத்துக் காட்டுகிறது.
மரம், கல், சுதையை பயன்படுத்தி, தெய்வச்சிலைகள் உருவாக்கி வழிபட்ட காலங்கள் கடந்து, செப்புத் திருமேனிகள் செய்து வழிபடும் சூழல் உருவானது பற்றி விளக்கப்பட்டுள்ளது. ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு