தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையர் அரும் பாடுபட்டுச் சேகரித்த ஓலைச்சுவடிகளில் பதிபசு பாசப் பனுவலும் ஒன்று. இதுவரை அச்சில் வராதது. மறைஞானதேசிகர் உரையுடன், தற்போது அச்சு வடிவம் பெற்றுள்ளது.
இது, சைவ சித்தாந்தம் பற்றிக் கூறும் சிறு நுால். குறள் வெண்பாவில் இயற்றப்பட்டது. மொத்தம், 332 பாடல்களைக் கொண்டது. பாயிரம், பிரமாணவியல், பதிசாதனவியல், பசுசாதகவியல், பாசசாதகவியல், பொதுவியல், போதகவியல் என ஆறு பிரிவுகளைக் கொண்டது.
மறைஞான சம்பந்தர் இயற்றிய நுாலுக்கு அவரது சீடர் மறைஞானதேசிகர் உரை எழுதியுள்ளார். இந்த சுவடி கி.பி.,1750ல் எழுதப்பட்டதாக பதிவாகியுள்ளது.
தற்போது உ.வே.சாமிநாதையர் நுாலக காப்பாட்சியர் உத்திராடம், ஓலைச் சுவடியிலிருந்து, தற்போது அச்சு நுாலாக பதிக்கும் பணியை செய்துள்ளார். இந்த நுால் ஆய்வுக்குரிய பல தளங்களை கொண்டுள்ளது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்