திருமாலுக்குரிய திருப்பதிகள் 108; அவற்றுள் ஒன்று தென்திருப்பேரை. தென்பாண்டி நாட்டில் நவதிருப்பதிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. அங்கே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் திருநாமம் மகரபூஷண பெருமாள். தமிழில் மகரநெடுங்குழைக்காதர் என்பதாகும்.
அவரை போற்றும் இப்பாமாலை நாராயண தீட்சிதரால் இயற்றப் பட்டது. நுாறு பாமாலைகள் கொண்டது. காப்புச் செய்யுள், பெரிய திருவடிகளின் வணக்கச் செய்யுள், வாழ்த்து என கட்டளைக் கலித்துறையில் ஆக்கப்பட்டுள்ளது.
தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதரைப் பாடத் துவங்கிய தீட்சிதர், ஒவ்வொரு நாளும் சில செய்யுள்களைப் பாடி, திருப்பித் திருப்பிச் சொல்லி உருகிப் பிரார்த்திக்க ஆரம்பித்தார். அதுவே, இப்பாமாலை என்கிறார் உ.வே.சா., பக்திச்சுவையையும் இனிமையையும் வழங்குகிறது. பக்தியுடன் பாராயணம் செய்து வந்தால், துன்பங்கள் நீங்கி இன்பம் உண்டாவது திண்ணம்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்