எந்த பின்னணியில் வளர்கிறோமோ, அதன் போக்கில் தான் வாழ்வும் இருக்கும் என்பதை உணர்த்தும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘அன்பால் சாதிப்போம்’ என துவங்கி, ‘படைப்பாற்றல்’ என முடியும், 29 கட்டுரைகள் மனித மனங்களை படம் பிடித்துக் காட்டுகின்றன. கட்டுப்பாடு என்ற சொல்லை அடிக்கடி உச்சரித்து, வாழ்வை அமைத்துக் கொள்ளலாம்.
அன்பால் இயங்கும் உலகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்காது. சிந்திக்கத் தெரிந்த மனிதகுலம், வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான கருத்துகளை உணர்த்துகிறது. மனநிறைவால் கிடைக்கும் நிம்மதி, கோப தவிர்ப்பின் அவசியம், படிப்பினையில் அடையும் உயர்வு, பேராசையில் இருந்து விலகல் போன்ற அறக்கருத்துக்களையும் சொல்கிறது.
பிரச்னையை சமாளிப்பது, தேடலில் கிடைக்கும் வெற்றி, இனிய பேச்சால் கிடைக்கும் நன்மை போன்றவை, உரையாடல் ஒரு அருங்கலை என உணர வைக்கின்றன. நல்ல நட்பு, அன்பு உறவுகள், சோர்வில்லாத உழைப்பு, நகைச்சுவை உணர்வு, போராட்டத் துணிவு, எளிதாக ஏற்றுக்கொள்ளும் மனம் இருந்தால், வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும் என்பதை உணர்த்தும் நுால்.
– டி.எஸ்.ராயன்