சிறுவர் – சிறுமியர் மனதில் பதியும் விதமாக, காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை எளிய நடையில் எழுதி உருவாக்கப்பட்டுள்ள நுால். அழகிய 100 குறுந்தலைப்புகளில், மதிப்பு மிக்க வாழ்க்கை தொகுக்கப்பட்டுள்ளது.
அழகிய விருதுநகர் என துவங்குகிறது முதல் பகுதி. அந்த ஊர் சிறப்பு, காமராஜரின் குடும்பப் பின்னணி, இளமைப் பருவம், கல்வி, குணநலன்கள், அரசியல் ஆர்வம், சுதந்திரப் போராட்ட வாழ்வு, வகித்த பதவிகள், செய்த சேவைகள், கிடைத்த பெருமைகள் என, சீராக கால வரிசைப்படி சொல்லப்பட்டுள்ளது.
அவற்றின் ஊடே அரிய படங்கள் பிரசுரமாகியுள்ளன. அவை, நிகழ்வுகளின் ஆதாரமாக அமைந்து சிறப்பிக்கின்றன. படிக்கும் ஆர்வத்தை துாண்டி, நன் மதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. காமராஜர் பற்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மெருகேற்றி தரப்பட்டுள்ளன.
அரிதின் முயன்று தேடி சேர்த்த செய்திகளும் உள்ளன. காமராஜரின் வாழ்க்கையை மனதில் விதைக்கும் நுால்.
– ராம்