பசியை விட, இசை, கவிதை மேலானது என நம்பும் இளைஞரை மையமாகக் கொண்ட நாவல். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டது. வாசிப்பை எளிதாக்க கற்பனை கலந்து படைக்கப்பட்டுள்ளது.
இசை, பாடலை படைப்பவரின் கற்பனை திறன் எவ்வளவு சுவாரசியமானது என்பதை, ஆழமாக பதிய வைக்கிறது. கவிதை எழுதும் இளைஞர் காதல் வயப்படும்போது, அதில் கலந்துள்ள மகத்துவத்தை ருசிக்க வைக்கிறது. காதலியை கவிதையாக சொல்லும் விதம் புதுமையாக உள்ளது.
காதலுக்கு மதம் தடையாக இருக்கக்கூடாது என உணர்த்துகிறது. இளம் வயதில் ஏற்படும் தீராத உடல் உபாதைகள், வாழ்க்கை நகர்வுக்கு எப்படியெல்லாம் தடைக்கல்லாக மாறும் என்பதை வலியுடன் சொல்கிறது.
செயல்கள் வழியாகவும், எதிர்பாராத மாற்றங்கள் வழியாகவும், மனிதன் பல முறை இறந்தும் உடல் சிதையாமல் வாழ்வதை பேசுகிறது. இளைஞர்களின் படைப்பாற்றல், லட்சியம், தனித்துவம், காதல், போராட்ட குணம் போன்றவற்றை பதிய வைக்கிறது. வாசிப்பில் ஏற்படும் தடைகளை துணை தலைப்புகள் உடைக்கின்றன. ஆங்காங்கே வரும் கவிதை வரிகள், கதையை பசுமை மாறாமல் கொண்டு செல்கின்றன.
– டி.எஸ்.ராயன்