புது மாதிரியாக, 200 பாடல்கள் கொண்ட தொகுப்பு நுால். ஒவ்வொரு பாடலுக்கும் பொருத்தமான படங்கள் தரப்பட்டுள்ளதால் கருத்து சட்டென புரிகிறது. பாடல்களை அரை மணி நேரத்தில் படித்து விடலாம். ஆனால் அவற்றை அசை போட, 10 நிமிடம் வரை செலவிட வேண்டும். இலக்கியம் படித்த திரைப்படப் பாடலாசிரியர், ‘இப்பொழுது பாடுவது என்ன பாட்டு’ எனக் கேட்பது சரியான நையாண்டியாக உள்ளது.
சமூக உண்மையை சொல்லும் வகையில், ‘கரைத்து குடித்தது பத்துப்பாட்டு, கஞ்சி ஊற்றுவதோ குத்துப்பாட்டு’ என யதார்த்தம் வடிக்கப்பட்டுள்ளது. ஏன் காந்தி பிறந்த தினத்தை கொண்டாட வேண்டும் என கேள்வி கேட்டு, ‘அன்று தானே மதுக் கடைக்கு விடுமுறை’ என, பெண்கள் எதிர்பார்ப்பு பொருத்தமாக சொல்லப்பட்டுள்ளது. பொழுதைப் பற்றி புரிந்துகொள்ள உதவும் பொருள் உள்ள புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்