தமிழ்ச் சிறுகதை உலகில் போற்றப்படும் புதுமைப்பித்தன், பல பரிணாமங்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். புதிய கருப்பொருள், உருவம், உத்தியில் சோதனை செய்துள்ளார். சிறுகதை படைப்பவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும். புராண மரபுகளை விடுத்து, புதிய பாணியில் கருத்தை துணிச்சலோடு வெளிப்படுத்தியுள்ளார். கேலி, எள்ளல், குத்தல் போன்ற அம்சங்கள் இவரது கதைகளில் இடம் பெற்றுள்ளன.
சமுதாயத்திற்கு கருத்தை அறைந்து சொல்லக்கூடிய திறத்தை உணர்த்துகின்றன. ‘சாப விமோசனம்’ என்ற கதையில், ராமனை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார். ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ சிறுகதையில், சிவனே வந்து அருள்பாலித்தாலும் மக்கள் மத்தியில் உலா வந்தால் நடக்கும் வேடிக்கையை வெளிப்படுத்துகிறார்.
இதில் அடங்கியுள்ள அகல்யா, செல்லம்மாள், ஆண்மை, அன்று இரவு, பிரமராக்ஷஸ், கயிற்றரவு, சிற்பியின் நரகம், சித்தி, திருக்குறள் குமரேசம் பிள்ளை, துன்பக்கேணி, காஞ்சனை, கபாடபுரம் போன்றவை நெஞ்சை விட்டு நீங்காது.
– ராம.குருநாதன்