ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வருகைக்குப் பின், இந்திய சமூகத்தில் நிலவிய நல்லிணக்கச் சிதைவு, ஆங்கிலேயரை வெளியேற்றுவதில் தீரன் சின்னமலையின் பங்களிப்பு போன்ற விபரங்களை பதிவு செய்துள்ள புதின நுால்.
கிழக்கிந்திய கம்பெனி, வங்காளத்தை கைப்பற்றிய பின், அரசை விரிவாக்கம் செய்தது பற்றி முன்னோட்டமாக விவரித்துள்ளது. மைசூரு ஹைதர் அலி ஆட்சியில் வரி திரட்ட வந்த திவானின் ஆட்கள் மீது அடங்காச் சினம் கொண்ட தீர்த்தகிரி, வளர்ந்ததும் எதிரிகளிடமிருந்து வரி பணத்தைப் பிடுங்கி தன் பெயரை, ‘சின்னமலை’ என பெருமையுடன் மாற்றிக் கூறியதை எடுத்துக் காட்டுகிறது.
மூன்றாவது, நான்காவது மைசூரு – ஆங்கிலேய போர், பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கு எதிரான போர், சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு எதிரான போர், திப்பு சுல்தானுக்கு சின்னமலை ஆதரவு, திப்புவின் தோல்விக்கு காரணங்கள், ஓடாநிலைக் கோட்டையை மக்களே அழித்தது போன்ற நிகழ்வுகளை காட்டுகிறது.
பிறந்த மண்ணைக் காக்கப் போராடிய சின்னமலை உள்ளிட்ட நால்வரை இரக்கமின்றித் துாக்கிலிடும் நிகழ்வின் விவரிப்பு, இதயத் துடிப்பைக் கூட்டும். அனைத்துத் தரப்பினரும் படிக்க வேண்டிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு