பத்து சிறுகதைகளின் தொகுப்பு நுால். காதல், பாசம், போட்டி, போராட்டம், வெற்றி போன்ற மையக் கருவுடன் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும், மனித வாழ்வியலை புரட்டிப் போடுகிறது. குறிப்பாக எல்லைச் சக்தி கதையில், நாட்டியப் பெண்ணின் போராட்டத்தை விவரிக்கிறது. தோற்றவன், வெற்றி பெற்றதை சொல்கிறது. சாதத்திற்கு உப்பு, மிளகாய், புளி சேர்த்த கலவை தான் கூட்டு என, பாட்டி செல்லாயி வாழ்ந்த காலத்தை அசை போடுகிறது, ‘இட்டார்க்கு இட்ட பலன்’ கதை.
அந்த கால வாழ்க்கையில், பொருளாதார பின்னடைவு இருந்தாலும், வாழ்க்கை சுமையாகவில்லை என்பதை முன்னோர்கள் வாழ்வியலை பொருத்தி உணர்த்துகிறது. கரடு முரடான காதலை, ‘காதல் பொல்லாதது’ என்ற கதையில் காதலின் புனிதத்தை, ஏமாற்றம், மறக்க முடியாமை போன்ற உணர்வுகளுடன் சொல்கிறது. அனைத்து சிறுகதைகளும், கவிதை வரிகளால் விரிகின்றன. கதை, கவிதை எழுத துடிப்போர் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்