ஆசிரியர் பணியில் பெற்ற அனுபவங்களை திரட்டி மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக எழுதப்பட்ட நுால். புத்தக வாசிப்பு பழக்கத்தால் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என துாண்டுகிறது.
வாழ்க்கையில் முன்னேற, கல்வி ஒன்றே சிறந்த கருவி என உணர்த்துகிறது. சிறுவயதில் தலைகுனிந்து படித்தால், பெரிய அளவில் சாதிக்கலாம் என்கிறது. எதையும் புரிந்து, ஆழமாக படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள அறிவுறுத்துகிறது. தன்னம்பிக்கையை வலியுறுத்துகிறது.
சாப்பிடும் முறை, கடவுள் வணக்கம், பெரியோரை மதித்தல் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், காந்தியடிகள் கூறிய ஒழுக்க நெறி, விவேகானந்தர், அப்துல் கலாம் கருத்துக்கள் தெளிவூட்டப்பட்டுள்ளன. பொது அறிவு, திருக்குறள் குறித்த செய்திகளும் உள்ளன.
பிள்ளைகளுக்கு பெற்றோர் நண்பர்களாக இருக்கவும், ஆசிரியர்களிடம் அடிக்கடி கருத்து அறிய வேண்டுமென கூறப்பட்டுள்ளது. மிரட்டாமல், அன்புடன் பாடம் கற்றுத் தருவதை ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறது. நல்ல பண்புகளை வளர்க்க உதவும் நுால்.
– முகில் குமரன்