சித்தர்களின் மருத்துவம், சிந்தனை, நெறிகள் குறித்த நுால். சித்த மருத்துவத்தின் தோற்றம் மற்றும் மூலிகை மருந்துகள் பற்றி விளக்குகிறது. ‘சித்தி’ என்ற சொல்லிற்கு அடைதல் என்று கூறுகிறது. பெறத்தக்க பேறு அடைந்தவரே சித்தர் என்றும், சித்தர்களின் பேராற்றல் வெளிப்பட்டதற்கு குறுந்தொகைப் பாடல்களை சான்றாக கூறுகிறது.
சித்தர்கள் மனித வடிவான தெய்வம் என விளக்குகிறது. மரணமில்லாப் பெருவாழ்வு குறித்தும், இது வரை வாழ்ந்த சித்தர்களையும் பட்டியலிடுகிறது. சித்தர்களின் நெறியை கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்று கூறுகிறது. தமிழ் இலக்கியத்திற்கும், அதன் வழி சமுதாயத்திற்கு தொண்டாற்றியுள்ளதையும் ஆராய்கிறது.
சமணர், பவுத்தர், மவுரியர், பல்லவர், சோழர், பாண்டியர், மராட்டியர் கால, மருத்துவ முறைகளை விளக்குகிறது. தமிழ் இலக்கியங்களில் மூலிகைகள் குறித்து விளக்கும் செய்திகள் வியப்பு தருகின்றன. சித்தர்களின் மருத்துவக் குறிப்புகளை அறிய உதவும் பயனுள்ள நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து