திருக்குறள் இன்பத்துப்பாலில், 250 குறட்பாக்களுக்கும் எளிமையாக கேள்வி – பதில் பாணியில் உரை தந்துள்ள நுால். பொருட்பாலில் உள்ள குறிப்பு அறிதல் போல இன்பத்துப் பாலிலும் குறிப்பு அறிதல் உள்ளது.
‘யான் நோக்கும் கால் நிலம் நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்’ என்பது வள்ளுவர் எழுதியது. இதைக் கேள்வி – பதில் போல் உரை தருகிறார். பார்க்கும் போதும் பார்க்காத போதும் பெண் செயல் எப்படி இருக்கும் என்பதும் கேள்வியாக ஆக்கப்பட்டுள்ளது.
‘அவளைப் பார்க்கும் போது தலை குனிந்து நிலத்தைப் பார்ப்பாள். பார்க்காதபோது என்னைப் பார்த்து சிரித்துக் கொள்வாள்’ என காதல் நுணுக்கம் காட்டப்பட்டுள்ளது. நகைச்சுவை ததும்பும் காதல் குறள், காதலன் தும்மல், காதலியிடம் ஏற்படுத்திய விளைவுகளையும் கேள்வியாக்கி உள்ளது.
தும்மினால் வாழ்த்தினாள்; அடுத்து சந்தேகம் கொண்டாள்; யார் நினைத்ததால் தும்மினீர் என்று கேட்டு அழுதாள் என்பது போல் மென்மையை அறிந்து தெளிய உதவும் புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்