சீனப் பெண்ணை மையமாகக் கொண்டுள்ள நாவல். உண்மை வாழ்க்கையை உணர்த்தும் வகையில் அமைந்தது. வாழ்க்கையை நிலை நிறுத்துவதற்கு அந்த பெண் எடுத்த பிரயத்தனங்கள் விளக்கப்பட்டுள்ளன. கல்வி பயில்வதற்கான முயற்சிகளும், இடறல்களும் அப்படியே விவரிக்கப்பட்டுள்ளது.
இளம்பருவத்தில் ஷியோ மிங் என்ற சீன பெண், மனம்போல் தொலைக்காட்சி சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தபோது, யுவான் சுவாங் பற்றிய ஒரு திரைப்படத்தைப் பார்க்க நேர்கிறது. புத்த மதம் பற்றிய பதிவுகளை அறிந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு வந்ததை அறிகிறாள்.
அந்தத் திரைப்படத்தைப் பார்த்த பின், இந்தியர்கள் சிறந்த நாகரிகத்துடன் வாழ்ந்த உண்மையை அறிகிறாள். தொடர்ந்து, சாக்கிய முனி என்னும் புத்தரின் தத்துவங்களைப் படித்து உணர்ந்து கொள்கிறாள்.
யுவான் சுவாங் என்ற சீனப் பயணியின் பயணக் குறிப்புகளைப் பின்பற்றிப் பயணம் மேற்கொள்ள விரும்புகிறாள். தாய்லாந்து, மலேஷியா வழியாக இந்தியாவிற்கு விமானத்தில் வருகிறாள். அந்த அனுபவத்தை தங்கு தடையின்றி விவரிக்கிறது. இந்தியாவில், வாழும் கலையை அறிந்து கொள்ளும் போது ஏற்பட்ட இடையூறுகளை எடுத்துரைக்கிறது. எளிய ஆங்கில மொழிநடையும் வரலாறும், அற்புதம் கலந்த கதையோட்டமும் கைபிடித்து அழைத்துச் செல்கின்றன.
– முகிலை ராசபாண்டியன்