ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட இதிகாச நுாலான மகாபாரதம் மிகப் பழைய முதல் பதிப்பை மீட்டெடுக்கும் வகையில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
சமஸ்கிருதத்திலிருந்து மகாபாரதக் கதையை சாரம் கெடாமல் சுருக்கி, உள்ளடக்க அத்தியாயங்களை கோவையாக்கி சீரான ஆங்கிலத்தில் சொல்லப்பட்டுள்ளது. மையக்கதை வாசிப்பின் போது துணைக் கதைகளும், கிளைக் கதைகளும் இடையூறு ஏற்படுத்தா வண்ணம் தனிப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன.
பதினெட்டு பருவங்கள் கொண்ட மகாபாரதம் சிறு சிறு தலைப்புகளில் கதைகளாகக் கொண்டு செல்லப்படுகிறது. நெடிய மகாபாரதத்தில் வியாசரும் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திர வம்சத்தின் தொடர்ச்சி, பாண்டு முடி சூடுவது, பாண்டவர்கள் நாடு கடத்தல், அர்ச்சுனன் – கர்ணனுக்கிடையில் போட்டி, சூதாட்டத்தில் தருமன் தோல்வி, கர்ணனுக்கு துரியோதனன் நட்பு, குருசேத்திரப் போரில் அர்ச்சுனன் போரிட மறுத்தல், போருக்குப் பின் தருமனின் ஆட்சி போன்ற முக்கிய நிகழ்வுகள் கண் முன் நடப்பதுபோல் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளன.
போட்டி, பொறாமை, வஞ்சகம், சூது, பழி தீர்த்தல், துரோகம், விரோதம் என மகாபாரதக் கதைகளில் வரும் அனைத்து கூறுகளும், இன்றளவும் வாழ்க்கையில் நிகழ்ந்து வருவது வியப்பு தரக்கூடியது. படித்து சுவைக்க வேண்டிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு