நீதி நுாலான நாலடியார், மூலப்பாடல்கள் எளிய உரையுடன் அளிக்கப்பட்டு உள்ளது. நீதியை உணர்த்தும் நாலடியார், திருக்குறளுக்கு அடுத்தபடியாக வைத்துப் பேசப்படுகிறது. சமண முனிவர்கள் இயற்றியது. மனிதர்கள் அறம் செய்து வாழ வேண்டும் என்பதை விளக்குகிறது.
நுாலுக்கு பதுமனார் துவங்கி, தருமர் என பலர் உரை எழுதி உள்ளனர். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற பெரும் பிரிவுகளை உடையது. தற்போது எழுதியுள்ள எளிய உரை, தற்காலத்தில் உள்ளவர்கள் படித்து புரிந்து கொள்ள உதவும்.
அதற்கடுத்து பொழிப்புரையில் பாடல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின் பாடலுக்கான கருத்துகளும் தெளிவாக கூறப்பட்டுள்ளன. பாடலுக்கான குறிப்புகள் தனியாக தெரியும்படி சுருக்கமாக கூறப்பட்டுள்ளன. இறுதியில், நாலடியார் பாடல்களை விரைவாக கண்டுபிடிக்க, அகர வரிசைப்படி முதற்குறிப்பு அகராதி அளிக்கப்பட்டுள்ளது. அருஞ்சொற்பொருள் விளக்கமும் உள்ளது. ஆய்வு மேற்கொள்வோருக்கு துணை செய்யும் நுால்.
– முகில் குமரன்