மகாகவி பாரதியார் பற்றிய அரிய தகவல்கள் பொதிந்துள்ள நுால். ‘பன்னிருவர் சேர்ந்து, நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடினர்... நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன் பார்’ என, ‘பாரதியார் ஆறாயிரம்’ எனத் தலைப்பிட்டு நுால் எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
‘கோவிந்த கிருஷ்ண பாஹி யது வீரா’ என்ற பஜனைப் பாடல் மெட்டில், ‘காக்கைச் சிறகினிலே’ பாடிய நிகழ்வு, பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி பிறந்த வரலாறு, பாஞ்சாலி சபதம் தோன்றிய வரலாறு போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. புதுச்சேரியில் புயல் அடித்தபோது உதித்த, ‘காற்றடிக்குது கடல் குமுறுது’ பாடல் உப்பளத்தில் உள்ள சேரிக்குச் சென்று முத்து மாரியம்மனை, ‘உலகத்து நாயகியே’ எனப் பாடியுள்ளது, பெண்கள் படும் துயரங்களை எண்ணி கண் கலங்கி, ‘கரும்பு தோட்டத்திலே...’ பாடலைப் பாடிய விபரங்கள் பதிவாகியுள்ளன.
பாரதியார் பாடல்களில் அமைந்துள்ள ராகங்களின் தொகுப்பு, போராட்டம் எதுவும் செய்யாமலேயே கடலுார் கேப்பர் மலைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டது; அந்த சிறை அறையை தற்போது பாரதியார் நினைவு நுாலகமாக மாற்றிய நிகழ்வு என அரிய செய்திகள் அடங்கியுள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்