சைவ சமய தத்துவக் கருத்துகளை, சாஸ்திர நுால்களின் அடிப்படையில் இளைஞர்களுக்குப் புரியும் வண்ணம் தரப்பட்டுள்ள நுால். குரு, லிங்கம், சங்கமம் என மூவகை வழிபாடுகள்; படைத்தல், காத்தல், அழித்தல் மறைத்தல், அருளல் என ஐவகை தொழில்கள்; ஐந்தெழுத்து மந்திரம் ஐம்பூதங்களாய் திகழும் காஞ்சி, திருவண்ணாமலை, திருவானைக்கா, காளஹஸ்தி, சிதம்பரம் திருத்தலங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஜோதி வடிவாய் திகழும் 12 ஜோதிர் லிங்கம் இடம் பெற்ற திருத்தலங்களும்; சிவபெருமானின் உருவமும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தஞ்சை பெருவுடையார், திருவையாறு அய்யாறப்பன், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் தியாகராஜர், மயிலாடுதுறை மயூரநாதர், மதுரை சொக்கநாதர், குற்றாலநாதர் கோவில்கள் பற்றியும் சுட்டப்பட்டுள்ளன.
சைவ சமய குரவர் நால்வர், திருமூலர், அப்பூதி அடிகளார், கண்ணப்ப நாயனார், காரைக்கால் அம்மையார், மெய்ப்பொருள் நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோருக்கு அருள்பாலிக்க நிகழ்த்திய திருவிளையாடல்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
– புலவர் சு.மதியழகன்