தொல்காப்பியம், சங்க இலக்கியத்தில் காணப்படும் மக்கள், விலங்கு, பறவை பெயர்களைப் பற்றிய நுால். வேர்ச்சொற்கள் கொண்டு ஆராயப்பட்டுள்ளது. ஒவ்வொன்றின் காரணப் பெயரை சுட்டிக்காட்டும்போது, மேலாய்வு செய்வதற்கு ஏற்ற வகையிலும் அமைந்துள்ளது. மக்கள், விலங்கு, பறவை பெயர்கள் தொல்காப்பியம் அடிப்படையில் எவ்வாறு அமைந்துள்ளன என்பதைச் சுருக்கமாக எடுத்துக் காட்டுகிறது.
ஐந்திணையில் வசித்த மக்கள் பெயர் எவ்வாறு அவரவர் வாழும் நிலத்தையும், வாழ்வு முறையையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்பதைச் சொல்கிறது. இரண்டாம் பகுதியில் விலங்குகள் பற்றிய கருத்தாக்கம் இடம் பெற்றுள்ளது. விலங்குகளின் வகைகளை அதற்கான காரணப் பெயரை சுட்டுகிறது.
இரலை என்பது மானை குறிக்கும் சொல், அதற்குக் காரணம் கொம்பால் வந்தது என்கிறார். எண்கு என்பது கரடியைக் குறிக்கும் சொல். அது எள் கறுமை நிறம். எனவே, நிறத்தால் பெயர் பெற்றது என குறிப்பிடுகிறது. மூன்றாம் பகுதியில் பறவைகள் காரணப்பெயரை தனித்தனியே எடுத்துக்காட்டியுள்ளது. குருகு, கூகை, பருந்து முதலிய பறவையின் பெயர் காரணம், வகைகள் விளக்கப்பட்டுள்ளன.
– ராம.குருநாதன்