காவிய நாயகன் ராமனைக் கன்னித் தமிழால் போற்றி, மரபு மாறாமல் அந்தாதியாக அழகிய 100 பாடல்களில் சிறப்பிக்கும் நுால். ராமனின் பண்பு, வீரம், கருணை, நேர்மை ஆகிய குணங்கள் கதைப் பாங்குடன் போற்றப்பட்டுள்ளன. பாடலுக்கு மகுடம் சூட்டும் தலைப்பும், விளக்கம் கூறும் பொருளுரையும், எல்லாரையும் கவர்ந்து நிற்கிறது.
பால காண்டத்தில் ராமன் அவதரித்தது முதல், வளர்ந்து விசுவாமித்திரருடன் சென்று வீரம் காட்டி, வில் வளைத்து சீதையை மணந்து, காட்டிற்கு நடந்து, குகன், சுக்ரீவன், வீடணன் நட்பைப் பெற்று, யுத்த காண்டத்தில் ராவணனை வீழ்த்தியது வரை ஆறு காண்டங்களில் அற்புதங்களை, தேனாறு பாய்வது போல் பாடப்பட்டுள்ளது.
நுாற்பயனாக நுாறாம் பாடலில், ‘ராமன் அந்தாதி நுால் படிப்போர் பிறப்பு அறுத்து, துயர் நீங்கி, நிரந்தரமாய் நீந்திக் கரை சேருவாரே!’ என்று பாடப்பட்டுள்ளது. துயரப் பிணி தீரவும், பிறவிப் பிணி மாறவும் இந்த அந்தாதி நுாலை படித்து மகிழலாம்.
– முனைவர் மா.கி.ரமணன்