அஷ்டாவக்ர கீதையின் ஆங்கில வழி தமிழ் மொழிபெயர்ப்பு நுால். சீதையின் தந்தை ஜனகருக்கும், அஷ்டாவக்ரருக்குமான உரையாடலின் வழியே வெளிப்படும் மெய்ஞானக் கருத்துப் பகிர்வுகளின் தொகுப்பாக விளங்குகிறது. ஆன்மாவைப் பற்றிய மாறுபட்ட கருத்தியல்களைப் புதிய கோணங்களில் காண முடிகிறது.
ஆன்ம துாய்மையை விவரித்து உள்ளுணர்வின் கருமையம் விவரிக்கப்பட்டுள்ளது. அத்வைத ஞானியின் இயல்புகளை சித்தரிப்பதால் ஆழ்ந்த புரிதல் ஏற்படுகிறது. எல்லாரும் ஒரே ஆன்மாவினரே, அது துாய உள்ளுணர்வே, குற்றமற்ற ஆன்மாவே கடவுள் என்ற நோக்கில் நுட்பமாக விளக்குகிறது.
ஆன்மாவின் துாய்மை அளவிற்கேற்பவே அதில் கடவுள் உறைவதாக உணர முடிகிறது. மனிதன் உள்ளுணர்வின் உதவியால் அறியாமைப் புதரை அழித்து, வாழ்க்கைத் துயரங்களில் இருந்து விடுபடுவதை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்பை ஏற்படுத்தும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு