தெலுங்கானா, ராயலசீமா பகுதியில் வாழ்ந்து வரும் தலித் மக்களின் வாழ்வியலை முன்வைத்து எழுதப்பட்டுள்ள வரலாற்று நாவல். தொடர்ந்த படையெடுப்புகளால் வாழ்வின் முகவரியை இழந்த மக்களின் பேரிழப்புகளை எடுத்துரைக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள், 18ம் நுாற்றாண்டில் தென் மாநிலங்களில் எப்படி வாழ்ந்தனர் என்பதை நாவலைப் படித்து புரிந்து கொள்ள முடியும். தெலுங்கில் எழுதப்பட்டது. இந்த நாவலுக்குச் சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது.
அனந்தபுரம் சமஸ்தானத்தை, 18ம் நுாற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆட்சி புரிந்த மன்னரின் இயல்பை விளக்கி, அந்தக் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்த துன்பங்களை எல்லாம் வெளிப்படுத்துகிறது.
பில்லே எல்லப்பா என்னும் ஆடு மேய்ப்பவன், குளத்தை உடைப்பெடுக்க வைக்கும் அயோக்கியர்களைத் தனியாளாக அடித்துப் பிடிக்கும் செயலில் வீரம் வெளிப்படுகிறது. அந்த வீரத்திற்கு உரிமை கொண்டாடும் எண்ணம் கூட இல்லாத எளிய மனிதனை பார்த்துப் பிரமிக்கும் செயலும், தொடரும் நிகழ்வுகளும் படிக்க துாண்டுகின்றன.
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் எத்தகைய இன்னல்களுக்கு ஆளாகினர் என்பதை இந்த நாவல் எடுத்துரைக்கிறது. பில்லே எல்லப்பா என்பவன், எல்லப்ப ஜெட்டியாகி அனந்தபுரம் சமஸ்தானத்தில் மல்யுத்த வீரனான வரலாற்றை மண்வாசனையுடன் சொல்கிறது. பாத்திரப் பெயர்களும், ஊர்ப் பெயர்களும் மண் வாசனையை தருகின்றன. ராயலசீமா வரலாற்றை அறிந்து கொள்ள படிக்க வேண்டிய நாவல்.
– முகிலை ராசபாண்டியன்