நகைச்சுவை உணர்வைத் துாண்டும் பாடல்களின் தொகுப்பு நுால். பழம்பெரும் புலவர்கள் கம்பர், அவ்வையார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி பாடல்களையும், காளமேகம், இரட்டைப் புலவர்கள், சிவப்பிரகாசர், பலபட்டடை, சொக்கநாதப் புலவர் உள்ளிட்டோரின் பாடல்களில் நகைச்சுவை கலந்துள்ள செய்திகளை பட்டியலிட்டுள்ளது.
பள்ளிப் பருவத்தில் நண்பனை வீட்டிற்கு அழைத்துச் செல்பவன், குணம் கெட்ட மனைவியிடம் சாதுர்யமாக பேசி, மதிய உணவு சமைத்து கொடுக்க கேட்கிறான். அவனது மனைவி பேயாட்டமாடுகிறார். நண்பன் சொல்லிக் கொள்ளாமல் ஓடி விடுகிறான். அவ்வையார் எழுதிய இந்த தனிப்பாடலில் உள்ள நகைச்சுவை அழகாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
உலோபிகளின், ‘வள்ளல்’ குணம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. காளமேகப் புலவரின், ‘மோர்’ குறித்த நகைச்சுவை பாடலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவாரசியம் தரும் பாடல்கள், உரிய மேற்கோளுடன் விளக்கப்பட்டுள்ளன. இலக்கியப் பாடல்களில் கலந்துள்ள நகைச்சுவையை அளிக்கும் நுால்.
– முகில் குமரன்