பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கமாக கொண்ட பாடல்களின் தொகுப்பு நுால். நோயற்ற உலகத்தை நோக்கிப் பயணிப்போம் என்ற பொருளுடன் துவங்குகிறது. மண்ணின் மகிமை, வானத்தில் பறப்போம், உலகம் என்பது நமக்காகும் போன்ற தலைப்புகளில் அமைந்துள்ளன. சந்த பாடல்களாகவும், புதுக்கவிதைகள் போலும் உள்ளன.
ஆசிரியராக பணியாற்றிய போது, மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் எழுதப்பட்ட பாடல்களும் உள்ளன. காந்தி எனும் காந்தம் என்ற தலைப்பில் அமைந்த பாடல், ‘பொக்கை வாயழகனின் மந்திர மொழி கேட்டாயா...’ என, எளிதாக மனதில் தங்கும் வகையில் அமைந்துள்ளது.
தேடி வந்த செந்தமிழ் என்ற தலைப்பில் அமைந்த பாடல், ‘முல்லைப்பூ நந்தவனத்தில் மூழ்கித் திளைத்த தென்றலாய்...’ என தாலாட்டுகிறது. எளிமையும், பொருட்செறிவும், நளினமும் நிறைந்த பாடல்களின் தொகுப்பு நுால்.
– ஒளி