பழந்தமிழர் வாழ்வில் அறம், இறையாண்மை, கல்வி, வழிபாடு, வணிகம், உளவியல், நீர் மேலாண்மை, அறிவியல், மனித உரிமை என சிறப்புக்கூறுகளை விவரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
தொல்காப்பியம் தொட்டு, சங்க இலக்கியங்கள், திருக்குறள், காப்பியங்கள், நீதி நெறி நுால்களிலிருந்து தேர்ந்து முன்வைக்கப்பட்டுள்ளன. அகம், புறம் சார்ந்த அறக் கோட்பாடுகளையும் எடுத்துக்காட்டுகிறது. பட்டினத்தார் பாடல்கள் வரை காணப்படும் கடவுள் பற்றிய சிந்தனைகள், வழிபாட்டு முறைகள், குலதெய்வ வழிபாடு, ஆசீவகம், சாங்கியம், சமணம், பவுத்தம் போன்ற சமய அமைப்புகளில் வெவ்வேறு காலங்களில் மாறிய மரபுகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
உலகின் பல பகுதிகளில் நாகரிக எழுச்சி உருவான காலச் சூழலிலேயே, தமிழர் வாழ்வும் மேம்பட்டதாக விளங்கியதை விளக்குகிறது. பழந்தமிழரிடம் நிலவிய வியக்க வைக்கும் அறிவு மரபு, அறிவியல் மரபை அறிய உதவும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு